மனதில் தோன்றிய சின்ன சின்ன கனவுகளும் நினைவுகளும் கவிதைகளாய்........

Followers

01 March 2012

காளிகேசம்

பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

பத்மனாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும்.

பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டும் வகையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 50 கட்டணம் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. தக்கலையில் ரூ.150 முதல் வாடகை உள்ள லாட்ஜ்கள் உள்ளன.

வட்டகோட்டை

கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு கொத்தளமாக மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.கோட்டையின் மதில் சுவர்கள் 25 முதல் 26 அடி உயரம் கொண்டவையாக அமைந்துள்ளது. கோட்டையின் முன்புற சுவர் 29 அடி அகலமும், மூலைகளில் 18 அடியும், பின்புறம் 6 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த கோட்டை மார்தாண்டவர்மர் ஆட்சியில் டி லெனோய் என்பவரின் ஆலோசனையில் கட்டப்பட்டதாகும்.

மாத்தூர் தொட்டி பாலம்

திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன. மேலும், 18 அடி உயரமுடைய அனுமான் மற்றும் பெண் விநாயகர் சிற்பம் கொண்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், பாம்பை மூலவராகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்.